அந்த நொடி
By Dr. Vinotha
கணவன்–மனைவி உறவு என்பது ஒரு சாதாரண உறவல்ல; அது நம்பிக்கை, புரிதல், பொறுமை, மற்றும் சொல்லாத உணர்வுகளின் நெய்த பந்தம். இந்தக் கதையில், வாழ்க்கையின் சின்ன சின்ன தவறான புரிதல்கள், சொல்லாமல் வைத்துக் கொண்ட கோபங்கள், மனதிற்குள் அடங்கிய காயங்கள்—இவை எல்லாம் ஒரே வீட்டுக்குள் இரு இதயங்களை மெதுவாகப் பிரிக்கத் தொடங்குகிறது. ஆனால், ஒரு எதிர்பாராத தருணம் அவர்களை தங்களின் உறவை மீண்டும் பார்க்க வைக்கிறது. நம்பிக்கை மீண்டும் மலரும்போது, உறவு எவ்வளவு அழகாக மாற்றம் அடைகிறது என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்வது இந்தச் சிறுகதை. இது வெறும் கணவன்–மனைவி கதை அல்ல… இது “நாம்” என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை கண்டுபிடிக்கும் ஒரு பயணம்.
அந்த நொடி. எழுதியவர் விநோதா
அன்று ஒரு அற்புதமான மாலை பொழுது... அன்று மட்டுமில்லை எப்போதுமே தான்...
என் பெயர் பிரியா. என் கணவர் பெயர் சந்தோஷ். எங்களுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகின்றன, இரு அழகு குழந்தைக்களும் உள்ளன.
இந்த பத்து வருடமும் மாலை நேரங்களில் எங்கள் அபார்ட்மென்ட் பூங்காவில் என் வயதை உடைய பெண்களுடன் அமர்ந்து அரட்டை அடிப்பேன்.
பிற வீட்டு சமாச்சாரங்கள், எங்கள் குழந்தைகளின் பெருமைகள், கணவன்மார்களின் குறைகள், மாமனார் மாமியாரின் வெறுப்பேற்றும் செயல்கள், என நாங்கள் பேசாத டாப்பிக்கே கிடையாது.
சிரித்து மகிழ்ந்து கும்மாளம் போட்டுவிட்டு. நான் வீட்டுக்கு வந்து இரவு உணவை சமைத்து குழந்தைகளுக்கு ஊட்டி தூங்க வைத்த பின்தான் என் கணவர் வருவார்.
காலை பத்து மணி முதல் இரவு ஒன்பது வரை அவருடைய கடுமையான வேலை தொடரும்.
அவர் வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு வந்து சேர நாங்கள் இருவரும் ஒன்றாக உண்ணுவோம். முதல் சில வருடங்களில் அந்த தருணத்தை நாங்கள் இருவருமே மிகவும் நேசித்தோம்.
அப்போது என் உணவை அவர் பாராட்ட தவறியதே இல்லை. நானும் அவருக்கு பிடித்த உணவை பார்த்து பார்த்து செய்வேன்.
ஆனால் ஆண்டுகள் நகர வீட்டில் காலை மதியம் என வேலையின்றி அமர்ந்திருக்கும் என் மூளையும் மாலை பெண்மணிகளின் அரட்டையும் என்னுள் சில கேள்விகளை எழுப்பியது.
அந்தக் கேள்விகள் எங்கள் இரவு உணவு வேலையை நாங்கள் வெறுக்கும் தருணமாக மாற்றியது.
வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களேனும் சண்டை வந்துவிடும். என் ஆசைகளை நான் கூற, அப்படியே பேச்சுவாக்கில் அது அவரை குறை சொல்வதாக மாற, அதற்கு அவர் கொடுக்கும் பதில் என் கோபத்தை தூண்ட, மிகப்பெரிய சண்டையாக முடியும்
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு அவரது கணவர் இதை செய்தார். மேல் வீட்டு ஆன்ட்டிக்கு அவரது கணவர் அதை செய்தார். நீங்கள் எனக்கு என்ன செய்வீர்கள் என்பது போன்ற கேள்விகள் என் வாயில் வர சண்டைகள் அதிகமாயின.
எனது ஆடம்பர ஆசைகளும் பொறாமைகளும் எங்களின் அமைதியை நிலை குலையச் செய்தது.
சில நாட்கள் அவரின் அன்பான பேச்சால் புன்னகையால் என் வாயை மூடி விடுவார்.
சில நாட்கள் எனது கேள்விகளினால் துவண்டு வருந்தி வாடி என் வாயை மூடி விடுவார்.
வேறு சில நாட்கள் அவரும் சண்டையிடுவார்.
இன்னும் சில நாட்களில் இரவு உணவை வெளியவே முடித்துக் கொள்வார் அதற்கான சண்டே அடுத்த நாள் நிச்சயம் நடக்கும்.
ஒவ்வொரு முறையும் அவர் தான் என்னை சமாதானம் செய்தார்.
என்ன இருந்தாலும் ஒவ்வொரு வார கடைசி விடுமுறையிலும் நாங்கள் குடும்பமாய் எங்காவது சென்று குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்துவிட்டு தான் வருவோம். அதற்கு முழு காரணம் எங்களின் குழந்தைகள் தான்.
வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதை நாங்கள் விவாதிக்கும் நேரம் குழந்தைகள் உறங்கும் நேரம் தான். அதே போல் நாங்கள் நால்வரும் ஒன்றாக இருப்பது வார கடைசி விடுமுறையில் மட்டும் தான் என்பதால். அந்த நேரத்தில் எந்த பிரச்சினை பற்றியும் பேச மாட்டோம்.
சில நேரங்களில் எனக்கு தோன்றும். நாங்கள் ஒன்றாக இருப்பதற்கு காரணமே எங்கள் குழந்தைகள் மட்டும் தான் என்று.
அவ்வளவு சண்டை, மணக் கசப்பு… அப்படியே வாழ்க்கை ஓடிக் கொண்டு இருந்தது.
எனது தனிமை தான் என்னை இப்படி செய்யத் தூண்டுகிறது என்பதை தானாக அறிந்து கொண்ட என் கணவர் எனக்கு பிடித்த தையல் வேலை செய்ய அவரால் இயன்ற அளவு செலவு செய்து ஒரு மெஷினை வாங்கி வந்தார்.
நானும் மிகவும் மகிழ்ச்சியுடன் என் கணவர் குழந்தைகள் என என் வீட்டுக்கு நானே தைக்கத் தொடங்கினேன் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் மனக்கசப்பு இருந்தாலும் தையல் தொழிலை செய்தால் அது ஓடிவிடும்.
அதை நான் மிகவும் ரசித்து செய்ய, அக்கம்பக்கம் இருப்போருக்கும் தெய்த்து கொடுக்க. சம்பாதிக்கவும் துவங்கினேன்.
நானாக சம்பாதித்த பணத்தை, அதுவும் எனக்குப் பிடித்த ஒன்றை செய்து அதற்கு கிடைத்த சன்மானத்தை கண்டு உள்ளம் பூரித்து மகிழ்ந்தேன்.
அப்படிப்பட்ட உணர்வை வார்த்தையால் விவரிக்க இயலாது அந்த உணர்வுக்காக பலரும் ஏங்குகின்றனர்… பாடுபடுகின்றனர் ஆனால் அதை எனக்கு எழிதில் கொடுத்தவர் என் கணவர்.
போராடாமல், ஏங்காமல் கிடைத்ததாலோ என்னவோ. அதன் அருமை எனக்கு அப்போது புரியவில்லை.
அவரது விருப்பமான ஓவியம் மற்றும் எழுத்து தொழிலை விடுத்து, மாடாக உழைத்து, அந்த உணர்வுக்கான ஏக்கத்தை மறைத்து, எனக்காக என் குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த அந்த உன்னதமான மனிதரை நான் அப்போது புரிந்து கொள்ளவே இல்லை.
ஆசை வலைகளில் சிக்கிக்குண்ட இனம் தான் இந்த மனித இனம்.
ஆனால் அந்த ஆசைகள், என் கணவனை அவரின் அன்பை, மறைக்கும் அளவுக்கு நான் அனுமதித்தது தான் மாபெரும் தவறு.
கார் வேண்டும் என்றேன். சண்டை போட்டேன். ஒரு வருடம் கழித்து வாங்கினார்.
நான் நினைத்தேன், நான் போட்ட சண்டையால் தான் இது கிடைத்தது என்று. ஆனால் உண்மை அதுவல்ல சிறிது சிறிதாக சேமித்து திட்டமிட்டு. லோன் வாங்கி. தேவைப்படும் நேரத்தில் கார் வாங்கினார். இதை புரிந்து கொள்ளும் அறிவு இருந்த போதும் அதை ஏற்காமல் நான் மீண்டும் மீண்டும் வேறு பல சண்டைகள் போட்டுக் கொண்டே தான் இருந்தேன்.
இப்படியாக எங்கள் வாழ்க்கை இன்பம், துன்பம், கருத்து வேறுபாடு என மெல்ல நகர்ந்தது.
ஒரு நாள் நான் வழக்கம்போல என் இனிமையான மாலை நேரத்தை என் தோழிகளுடன் செலவிட்டு விட்டு, என் வீட்டை அடைந்தபோது அந்த போன் கால் வந்தது.
என் கணவரின் நண்பர் பேசினார் குரலில் அவ்வளவு தடுமாற்றம் பிரியா சந்தோஷுக்கு ஆக்சிடென்ட் சீக்கிரம் ஜோசப் மருத்துவமனைக்கு வந்துருங்க. பயப்பட ஒன்றுமில்லை. என்று சொல்லி வேகமாக போனை வைத்தார்.
எனக்கு தெரியும் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றால், அவரே எனக்கு போன் செய்திருப்பார் என்று.
அந்த செய்தியை கேட்ட அந்த நொடியில் என் வாழ்வே மாறியது. ஒய்யாரமாக ஆனந்தமாய் வாழ்ந்த வாழ்வு அந்த நொடியிலிருந்து தலைகீழாக மாறியது.
பக்கத்து வீட்டாரிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு கடவுளை வேண்டிக் கொண்டே விரைந்தேன்.
அவர் கண் விழிக்கவே சில வாரமாகின. அவர் பிழைப்பது மிகவும் கடினம் என டாக்டர்கள் கூறினர் அப்போது தான் அவர் இல்லாத வாழ்வை சிந்தித்தேன்.
அப்போது புரிந்தது என் பல நாள் கேள்வியான அவர் அதை செய்தார், இவர் இதை செய்தார், நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கான பதில் கிடைத்தது. அவர் எனக்கு அன்பையும், நிம்மதியையும், மட்டுமல்ல சங்கடம் அற்ற வாழ்வை கொடுத்துள்ளார் என்று.
மாமா இறந்துட்டா பிரியா நம்ம வீட்ல தான் இருப்பா என என் அண்ணன் கூற, அதெல்லாம் வேணாம் உங்க அம்மா வீடு கிராமத்துல சும்மா தானே இருக்கு அங்க போய் இருக்கட்டும் என்றார் அண்ணி
இது என் காதில் விழுந்து விட,
எனக்கான கௌரவத்தையும் இவ்வளவு நாட்கள் அவர் தான் தந்திருக்கிறார் என புரிந்தது.
அவர் போயிட்டா நீ என்ன மா பண்ணுவ ஒரு வேலைக்கு கூட இதுவரை போகலையே என என் அம்மா அழ.
அப்போதுதான் புரிந்தது அதற்கான வழியாக தையல் தொழிலை எனக்கு காண்பித்தவர் அவர் தான் என்று.
உன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க உனக்கு காசு வேண்டுமே அதற்கு எங்கே போவ என்று எனது தோழி கேட்க,
என்னுடைய ஆடம்பர ஆசைகளுக்கு செவிசாய்க்காமல் அவர் என் பெயரில் என் குழந்தைகளின் பெயரில் சேமித்த மாபெரும் தொகையின் அருமை புரிந்தது.
இப்படியாக பல சம்பவங்கள், என் கண்களை மூடியிருந்த ஆசை திரையை விலக்கி அவர் அண்பை தெளிவாக காண்பித்தது. நான் வீணாக சண்டையிட்டு இழந்த நொடிகளை எனக்கு புரிய வைத்தது.
அவரைப் போன்ற ஒரு கணவரை அடைந்த பெண் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் ஆனந்தமாக இருந்து கணவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் நானோ அவர் நிம்மதியை கெடுத்து என் ஆனந்தத்தை தொலைத்தேன்.
துளைத்த அந்த நொடிகள் திரும்ப கிடைக்கப் போவதில்லை இனிவரும் நொடிகளை வாழ என் கணவன் மீண்டு வருவாரா என்று தெரியவில்லை.
ஒரு சில வாரங்களுக்கு பின் என் கணவர் கண்விழித்தார்.
நள்ளிரவு ஜாமத்தில் உறங்க மனமின்றி என் கணவனை பார்த்து கண்ணீர் வடித்த படியே கடவுளிடம் வேண்டினேன். என் தொல்லையிலிருந்து அவரை காப்பாற்ற தான் இப்படி செய்தாயோ? நான் என் தவுறுகளை உணர்ந்து அதற்கான தண்டனையை மனதளவில் அனுபவித்து விட்டேன். இனி எனக்கு நீ தந்த இந்த நல்வாழ்வை காப்பேன். தயவுசெய்து என் கணவனை எனக்கு திருப்பி கொடுத்து விடு என அழுதேன்.
எனது வேண்டுதல் அந்த இறைவனை அசைத்தது போலும்.
என் கணவரின் அசையா உடலும் அசைந்தது.
சந்தோஷ் என நான் அவரின் கையை பிடிக்க.
கடும் சிரமத்தோடு கண்விழித்தார். என் சோக கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாற அவசரமாக டாக்டரை அழைத்தேன்.
டாக்டரும் பல பரிசோதனைகளை செய்து, கங்கிராட்ஸ் மிஸ்ஸஸ் சந்தோஷ் உங்கள் பிராத்தனை வீண் போகவில்லை என்றார்.
என் கணவர் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாக கூறினார்.
அவர் மீண்டும் எப்போது கண்விழித்து என்னை பார்ப்பார் என்று தவமாய் காத்திருந்தேன்.
அது விரைவில் நடந்தது. அடுத்த முறையும் நள்ளிரவில் தான் கண்விழித்தார். இந்த முறை நான் டாக்டரிடம் ஓடவில்லை. அவரின் கையை பிடித்து என் கண்ணில் வைத்து மன்னிப்பு கேட்டேன். என் காதலை சொன்னேன்.
சொல்லி முடித்து நான் கண் திறக்கையில் அவர் கண் மூடி இருந்தது.
இப்படி நாட்கள் ஓடி அவர் ஒரு வழியாக சுயநினைவுக்கு வந்தார். ஆனால் அவரது காது கேட்க வில்லை, காலும் குணமாக வில்லை எழுந்து நடக்க இன்னும் பல நாட்கள் ஆகும் என்றனர்.
அவர் திரும்ப கிடைத்ததே மாபெரும் சந்தோஷமென வீடு திரும்பினேன். நன்றாக சிரித்துப் பேசினார் ஆனால் நாங்கள் பேசுவதை தான் அவரால் கேட்க முடியவில்லை.
காலமெல்லாம் ஓடி ஓடி உழைத்த என் கணவர் விபத்திற்குப் பிறகு உடல் நலம் இல்லாததால் ஓய்வெடுத்தார்.
பிள்ளைகளும் அவருடன் விளையாடி சிரித்து மகிழ்ந்து உற்சாகமாக இருந்தனர். பிள்ளைகள் உறங்கிய பின் பள்ளிக்குச் சென்ற பின் என்னுடன் இருப்பார். அந்த பொன்னான தருணங்களை நாங்கள் ஒன்றாக ரசித்தோம்.
ஆசை திரையை நான் முழுவதுமாய் விலக்கியிருந்த நிலையில், அவர் கண்ணில் மின்னும் காதல் என் கண்ணுக்கு தெரிந்தது அதில் மனநிறைவு அடைந்தேன்.
பிறகு நாட்கள் நகர, நான் சம்பாதிப்பது அவசியம் என புரிய தையல் தொழிலை செய்யத் துவங்கினேன்.
நான் அதிக நேரம் வேலை செய்ய துவங்க, அவரும் எனக்கு உதவினார். மற்ற நேரங்களில் எங்கள் வீட்டு பால்கனிக்கு சென்று நிம்மதியாக காற்று வாங்குவார்.
அந்த நேரத்தில் தான் என் கணவரும் அவருக்கான வாழ்வை வாழ முதல் படி எடுத்துவைத்தார்.
பேனாவையும் பேப்பரையும் எடுத்து வரையவும் எழுதவும் துவங்கினார். ஓவியம் என்றால் அனைத்தையுமே அதே போல் வரைந்து விடுவார். அதுமட்டுமின்றி தஞ்சாவூர் ஓவியங்கள், சில மார்டன் டிசைன்கள், க்ளாஸ் பைண்டிங், மண்டலா ட்ராயிங் என அனைத்துமே சிறப்பாக செய்தார்.
அதை பார்த்த பிறகு தான் அவரின் திறமையும் அவர் அதன் மேல் கொண்டிருந்த பற்றும் எனக்கு புரிய தொடங்கியது.
அவருக்குப் பிடித்ததை அவர் செய்ய தொடங்க அவரது உடலும் மனமும் நன்றாக இருந்தது.
அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதையும் நான் அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
உங்களுக்கு இதில் எல்லாம் விருப்பம் அதிகமா என நான் வினவிய போது தான் உரைத்தார்.
இதில் மட்டும் தான் எனக்கு முதலில் எல்லாம் விருப்பம். பிறகு குடும்பம் உருவாகி விட அதை பார்க்க ஓடி ஓடி உழைக்க துவங்கி விட்டேன்.
உன்னுடன் சண்டை போட்டு தனியாக அமர்ந்திருக்கும் பல நாட்களில் என் விருப்பமான இதை முழுவதுமாய் விட்டதை எண்ணி வருந்துவேன்.
இப்போது இதை செய்யும் போதுதான் ஏதோ இழந்தது அனைத்தையும் பெற்ற சந்தோஷம் வருகிறது என்றார்.
உனக்கு தையல் பிடிக்குமென எனக்கு முன்பே தெரியும் அதனால் தான் அதற்கென காசை சேமித்து பிள்ளைகளும் வளர்ந்து பெரியவளாகி பள்ளி சென்று விட, உன் தனிமையை போக்க அதை வாங்கி தந்தேன் என்றார்.
நீ அதைச் செய்து அதில் இன்பம் அடைந்த போது, எனக்கும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னால் இயலாத ஒன்றை உனக்கு நான் தந்தேன் என மனநிறைவாக இருந்தது என்றார்.
இதை எல்லாம் அவர் வரைந்து கொண்டே இயல்பாய் பேசிக் கொண்டு இருந்தார்.
எனக்குத் தான் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. என்னை பற்றி எண்ணிய என் கணவரை பற்றி நான் கொஞ்சமும் எண்ணவில்லையே என குற்ற உணர்வாய் இருந்தது.
அவர் எழுந்து நடமாட இயலாத நிலையில் இருந்த அந்த ஆறு மாதமும் தனக்கு பிடித்த இத்தொழிலை செய்தார்.
அவரின் திறமை மிக உன்னதமாக இருக்க அதை பல இடங்களில் பதிவிட்டு சம்பாதிக்க தொடங்கினார்.
வருமானம் மிக மிக குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சி ரொம்பவும் அதிகமாக இருந்தது. இருவருமே இருப்பதை கொண்டு திருப்தியாக வாழ கற்றுக் கொண்டோம்.
அவருடைய ஓவியங்கள் டிசைன்கள் எல்லாம் கண்ணை கவர, புடவைகளில் அச்சிட்டு விற்க துவங்கினேன் அதுவும் நன்றாக விற்பனை ஆனது.
இது தொடர்பாக நாங்கள் இருவரும் ஆன்லைன் கோர்ஸ் செய்தோம். நிறைய கற்றுக் கொண்டோம்.
பின் சொந்தமாக துணி கடை திறக்க முடிவு செய்தோம்.
இது அனைத்தையும் செய்ய உதவியது அவர் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணமும், கஷ்டப்பட்டு வாங்கிய நிலத்தின் பத்திரமும் தான்.
என் திறமையை நம்பி அவர் அதை செய்ய முன்வந்தார் உண்மையில் எனக்கான புது உலகையே காட்டினார். அதே சமயம் அவரது சந்தோஷத்தையும் அவருடைய உலகையும் கண்டுகொண்டார்.
சில பல சிகிச்சைகள் செய்து, காது கால் என அனைத்தும் நலமாக என் பழைய கணவராய் மீண்டு வந்தார் என் சந்தோஷ்.
எனது சந்தோஷம் எனக்கு மீண்டும் கிடைத்தது. இம்முறை அதை முழுமையாக அனுபவிக்க நான் முடிவுடன் இருந்தேன்.
இப்போது துணி கடையும் மிகவும் நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த கடை தொடங்கி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. என் கணவரின் படைப்புகளை தொடர்ந்து படித்து வருவதால் என்னால் இன்று கோர்வையாக எழுத முடிகிறது.
என்னை போன்ற பல பெண்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர்.
அவர்களுக்காகத் தான் இதை எழுதுகிறேன் என் கணவரின் விபத்து ஒரு நொடியில் தான் நடந்தது ஆனால் அது என்னையும் என் வாழ்வையும் மாற்றியது.
இப்படிப்பட்ட ஒரு நொடிக்காக காத்திருக்காமல் இப்போதே மாறிவிடுங்கள். இல்லை என்றால் ஆனந்தமாக இருக்க வேண்டிய நொடிகளை வீணடித்து விட்டோமே என வருந்தி வரும் காலத்தில் வாடுவீர்கள்.
நன்றி தோழிகளே.
வணக்கம் நான் சந்தோஷ்.
என்னடா கணவனும் மனைவியும் மாறி மாறி கதை சொல்கின்றனரே என்று நினைக்க வேண்டாம்.
நான் அவளைப் போல வளர்க்காமல். சீக்கிரம் முடித்து விடுவேன்.
என் மனைவியின் இந்த எழுத்துக்களைப் படித்த போதுதான் புரிந்தது அவள் என்னை நூறு சதவீதம் புரிந்து கொண்டிருக்கிறாள் என்று.
இதை படித்த பின் என் பக்க கதையையும் எழுத விரும்புகிறேன்.
அவள் சொன்னது அனைத்தும் உண்மை தான் ஆனால் என் பக்கமும் பல குறைகள் இருந்தன.
அதில் முக்கியமான ஒன்று, அவளைத் திருமணம் செய்து கொண்ட பின் வெறும் இரண்டே மாதத்தில் வற்புறுத்தி அவள் வேலையை விடச் செய்தேன். பெண்கள் வேலைக்குப் போனால் வீட்டில் ஆண்களின் மரியாதை குறையும் என்ற கேவலமான எண்ணம்.
ஒருவேளை அவளது விருப்பம் போல அவள் வேலைக்கு சென்று இருந்தால் அவளது ஆசைகள் அனைத்தையும் தானாக நிறைவேற்றி இருப்பாள்.
ஒவ்வொன்றுக்கும் என்னை எதிர் பார்த்து வாழும் வாழ்வை வேண்டுமென்றே அவளுக்கு தந்து விட்டேன்.
அந்த குற்ற உணர்ச்சியில் தான் அவளுக்கு பிடித்த தையல் மெஷினை வாங்கி வந்தேன்.
வரவு செலவு கணக்குகள் பற்றியோ வீடு நிலம் வாங்கும் விஷயம் பற்றியோ என் வேலையை பற்றியோ நான் அவளிடம் பகிர்ந்து கொண்டதே இல்லை.
காரணம், வீட்டில் வெட்டியா இருக்கும் மனைவிக்கு, நான் ஏன் விளக்கமாக அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற திமிர்.
ஒருவேளை பகிர்ந்து இருந்தால் அவளாகவே பலவற்றைப் புரிந்து கொண்டிருப்பாள் பாதி சண்டை வந்திருக்காது.
இப்படியாக பல விஷயங்களில் எனது தவறும் உள்ளது என்பதை, நான் நடமாட வழியின்றி வீல் சேரில் அமர்ந்திருந்த போது தான் புரிந்து கொண்டேன்.
என்னை இரவும் பகலும் கவனித்தாள் என்றுமே முகம் சுளிக்காமல் பணிவிடை செய்தாள்.
குழந்தைகளையும் நன்கு பார்த்துக் கொண்டாள் அதில் எந்த குறையும் வைக்க வில்லை.
எனக்காக எதையும் செய்யும் அவளுக்கு என்னிடம் எவ்வளவு சண்டை போடவும் உரிமை உள்ளது.
ஆனால் அவள் அந்த விபத்துக்கு பின் தானாகவே என்னை புரிந்து கொண்டாள். அவளின் தவறுகளை நான் சொல்லாமல் அவளாகவே புரிந்து கொண்டாள்.
அவளின் மாற்றம் என்னையும் மாறச் செய்தது, எனது தவறுகளை புரியச் செய்தது, அவளை புரிந்து கொள்ளவும் செய்தது.
சண்டை போட்டு அமைதியை கெடுத்தது அவளாக இருக்கலாம் ஆனால் அதற்கான அடிப்படைக் காரணம் நான் தான். எந்த விளக்கமும் கொடுக்காமல் அவளை கத்த செய்ததும் நான் தான்.
நான் அப்படி நடந்து கொண்டதற்கு இரு கரணங்கள் இருந்தன.
ஒன்று, ஆண் என்ற கர்வம்.
இரண்டு, என் கணவுகளை தொலைத்து, குடும்பத்திற்காக பிடிக்காத வேலையை வேண்டா வெருப்பாக செய்தது.
இருபத்தி நான்கு மணிநேரத்தில் கிட்டதட்ட பதினொரு மணி நேரம், நான் என் மணதுக்கு பிடிக்காத தொழிலை நான் செய்கிறேன்.
காரணம் பணத்தின் தேவை அதையும் நான் எனக்காக சம்பாதிக்கவில்லை என் குடும்பத்தினருக்காக தான் சம்பாதிக்கிறேன். அதை என் மனைவி புரிந்து கொள்ளாமல் சண்டையிடுகிறாள் என்ற வெருப்பு, ஆத்திரம்.
நான் பொறுமையாக சிந்தித்தால், இதில் என் தவறு தான் அதிகம். பணம் முக்கியம் தான், ஆனால் அதற்காக நான் என் கனவுகளை முழுமையாக ஒதுக்கி வைத்திருக்கக் கூடாது. நான் என் கனவை அடைய முயற்சி செய்யாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.
ஆனால் பாருங்கள் ஒரு பெரும் விபத்தால் என் கனவை என்னால் அடைய முடிந்தது.
உடல்நலம் சரி இல்லாமல் வேலைக்கு செல்ல இயலாமல் பண கஷ்டம் இருந்த போது அடைய முடிந்த என் கனவை நான் நலமாக இருந்த போதே நான் மனசு வைத்திருந்தால், வேலைக்கு லீவ் போட்டோ இல்லை குறைந்த சம்பளத்திற்கு குறைந்த நேர வேலை பார்த்தோ நான் என் கனவை தாராளமாக அடைந்திருக்கலாம்.
ஆனால் நான் அப்படி எல்லாம் செய்யாமல் நேரமில்லை என என்னை நானே ஏமாற்றிக் கொண்டு, பிடிக்காத தொழிலை செய்து பல வருடங்களை வீணடித்து விட்டேன்.
அதனால் உங்களின் கனவை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுத்து விட வேண்டாம். பிற்காலத்தில் அதை யாருக்காக செய்தீர்களோ அவர்களையே நீங்கள் வெறுக்க துவங்கி விடுவீர்கள்.
நண்பர்களே உங்கள் மனைவியை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் வரலாம், வராமலும் போகலாம், ஆனால் அதற்காக காத்திருந்து பொன்னான நேரத்தை வீணடிக்காமல் இப்போதே புரிந்து கொண்டு ஜாலியா வாழுங்க.
நன்றி நண்பர்களே.
பிரியா மற்றும் சந்தோஷின் கதை பலருக்கும் பலவற்றை ஞாபகப்படுத்தி இருக்கும்.
குறையில்லா மனிதர்களே கிடையாது. நிறையில்லா மனிதர்களும் கிடையாது. நாம் எதைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அனைத்தும்.
இந்த உலகில் இந்த காலத்தில் அனைவருமே காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடுகிறோம். எதற்காக ஓடுகிறோம் வேலை செய்கிறோம் என்றால் மிகவும் எளிமையான பதில் பணம்.
உண்மை தான் இந்த காலத்தில் பணமின்றி வாழ்வை நகர்த்த இயலாது. ஆனால் அதன் அளவை நாம் தீர்மானம் செய்யலாம்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது அனைவரும் அரிந்த பழமொழி ஆனால் யாருமே பின்பற்றாத பழமொழி.
காரணம் ஆசை, பேராசை, மட்டும் அல்ல, நாம் வாழும் சமூகமும் தான். குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் துவங்கி கல்யாணம் வரை நாம் எப்படி செய்கிறோம் என்பதில் தான் அனைத்து கௌரவமும் அடங்கி இருப்பதாக எண்ணுகிற சமூகம்.
சமூகத்தில் அங்கீகாரம் பெறும் பொருட்டு பணத்தின் தேவை அதிகமாகி விடுகிறது.
ஒன்றை நாம் என்றுமே மறக்கக் கூடாது. நாம் வாழ்வது நமக்காக, நம்மவர்களுக்காக, அதை செய்தால் போதும்.
நம்மால் இயன்ற பணத்தை சம்பாதித்து, அதற்கேற்ப எளிமையான வாழ்வை வாழ்ந்து, ஒரு நாளுக்கு ஒரு மணிநேரமாவது நமக்கு பிடித்ததை முழு மனதாக செய்து, இன்புற்று வாழ்வோம்.
பணத்தை விட முக்கியம் மனம் தான். அது நம்முடைய மனமாக இருந்தாலும் சரி, நமக்கு நெருக்கமானவரின் மனமாக இருந்தாலும் சரி. அதை புரிந்து, போற்றி, அதற்கு மதிப்பு கொடுத்தாலே போதும், வாழ்வை அழகாக வாழ்ந்து விடலாம்.
ஆனால் பலரும் அதை செய்ய தவறி வாழ்நாளில் பாதியை இழந்து விடுகின்றனர். வயதான பின் தான் தொலைத்ததை எண்ணி வருந்தி வாழ்நாளில் மீதியை இழந்து விடுகின்றனர்.
நாம் அத்தகைய தவறை செய்ய வேண்டாம்.
மனநிறைவோடு நம்மவர்களுடன் மகிழ்ந்து வாழ்வோம். அது தான் பொக்கிஷம்.
நன்றி.






