வொர்க் ஃப்ரம் ஆபிஸ்
By வேல்ஸ்
வருடம் 2100 இல், இப்போதைய Work from Home எனும் Culture எப்படி இருக்கும் எனும் ரீதியில் ஒரு கற்பனை.....
சுகேஷ், தன் தனி அறையிலிருந்து ஹாலுக்கு(ள்) வந்தான் , சுவரை கவனிக்கவில்லை .
தன் அறையிலிருந்து எட்டிப்பார்த்து, “என்னாச்சுப்பா, டயர்டா இருக்கீங்க போல, காப்ஸ்யூல்காபி போட்டிருக்கேன், சாப்பிடறீங்களா ?” என்றாள் உமையாள். சுகேஷின் இளம் மனைவி .
சுகேஷ் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவளோடு கடந்து கொண்டிருக்கும் நாட்களை அசை போட்டான்.
“ இங்க வாயேன்……………..அட, பக்கத்துல வாயேன் “
“ என்ன ஆபிஸ் டயத்துல ரொமான்சா, மதிய சாப்பாட்டுக்கு Lomoto வுல ஆர்டர் போட்டிருக்கேன் , இப்ப வந்துரும் ?” என்றபடி அவனருகில் காபி லோட்டாவுடன் அமர்ந்தாள்.
“ வொர்க் டென்சன்ப்பா……..” என்றபடி அமர்ந்திருந்தவன், நின்றிருந்த அவளை இலேசாக அணைத்தான். அவள் வயிற்றோரம் முத்தமிட்டான், “ எப்டி இருக்கு பேபி ?” என்றான்.
“…….ம்ம்ம், ஓகே தானாம். க்ரோத் நல்லாருக்காம். ஜனவரி முதல் நாளிலேயே டெலிவரி எதிர்பார்க்கலாம் “
“ தாங்க்ஸ் பா……இந்த 2100 ஆம் வருஷம் பொறக்கையில் , புத்தாண்டு வரவாய் நம்ம பிள்ளை….” சொல்லிவிட்டு சுவரைப் பார்த்தான் , 2099 – நவம்பர் 26, 11.33.48 என்றது சுவர்.
“ சந்தோஷமா இருக்கா……?” என்றாள்.
அவன் பதில் சொல்ல வாயெடுக்கையில், கதவு மணிச்சப்தம் கேட்டது
எழுந்தவனை உமையால் அவன் தோளில் கை வைத்து, “
Lomoto தான், இருங்க, நான் பார்க்கிறேன் “ என்று நகர்ந்தாள்.
‘யாருங்க’ என்று அவள் கேட்பதும், ‘இருக்காரு,உள்ள வந்து உட்காருங்க’ எனும் உமையாளின் குரல் மட்டுமே கேட்டது.
யாரோ, கதைவை தாண்டி உள்ளே வந்து வெளி ஹாலில் ஸோபா மீது வெயிட்டாக அமரும் ‘க்ரீச்’சும் கேட்டது. யார் என்று மோபைலின் கதவு கேமிராவில் பார்த்துவிட்டு முறுவலித்தான்.
“உங்களைத்தான் பார்க்க வந்திருக்காங்க, யாரோ காண்ட்ராக்டர் போல………….” உள்ளே மறைந்தாள் உமையாள்.
சுகேஷ் முறுவலித்தபடி எழுந்து, தன் அறையின் கணிணியை எட்டிப்பார்த்து, “ கோ டூ ஸ்லீப்” என்று ஸ்மைலித்து விட்டு, வெளி ஹாலுக்கு வந்தான்.
“வாங்க, என்ன இவ்ளோ தூரம் ?”
“ஸார், பேமென்ட் பாக்கி ஒண்ணு இருக்கு, நீங்க பாஸ் பண்ணாத்தான் பரவால்ல….”
“ஒரு மாசம் தானே ஆகுது?”
“ஆமா ஸார், ஆனா வேற காண்ட்ராக்ட் வொர்க் கையில் எதும்இல்ல…….அதனால கொஞ்சம் பைனான்ஸ் பிராப்ளம்…”
“இல்ல சார், உங்களுக்கு ஐம்பது நாள் தானே பேமெண்ட் டெர்ம்ஸ்..?”
அந்த காண்ட்ராக்டர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள், அந்த மனிதரின் கையிலிருந்த வாட்ச் போன் சிணுங்கியது. எடுத்து, ‘ஐயா……ஆமாங்க, அங்க தான் இருக்கேன்.சரிங்க…சரிங்க……சொல்லிடறேன்’ என்றுவிட்டு போனை சுகேசிற்கு கனெக்ட் செய்தார் அந்த ஆள். “ எங்க ஓனர், லைன்ல………”
சுகேஷ் தனது வாட்சை கனெக்ட்டி, “ சொல்லுங்க……” என்றான்.
“…………………………………………………….” மறுமுனை.
“ அதெல்லாம் கரெக்ட் தான் ………….ஆனா……………..”
“…………………………………………………………………………….”
“ சரிதான் சார்………முப்பது நாள்தானே ஆயிருக்கு..?”
“…………………………………………………………………………” மறுமுனையில் கொஞ்சம் காட்டமான வேண்டுகோள் போலும்.
“ ரூல்ஸ் இடம் கொடுக்காதே …………ஸார்…”
மறுமுனை அசௌகரியத்துடன் வைக்கப்பட்ட வேகம், இங்கே சுகேசின் முகத்தில் வெடித்தது.
இடது கை வாட்சை கோபமாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அதில் அழைப்பின் சப்தம்.
தொட்டு, “ சொல்லுங்க ஸார்…………” என்றான் சுகேஷ். மறுமுனையில் அவனது மேலதிகாரி. புரிந்துவிட்டது.
“ என்ன சொல்லுங்க ஸார்? பேமண்ட் போட ஆகாதா?”
“ போடலாம் ஸார், இன்னும் டைம் இருக்கு, பைனான்ஸ் டிபார்ட்மெண்ட் அப்ரூவலே இன்னும் வரலை….அப்………..”
“ பைனான்சா…….யாரு அழகிரி தானே ? கனெக்ட் பண்ணு, நான் பேசறேன், எந்த காலத்துலப்ப நீ இருக்கே……கலெக்டர் கூப்பிட்டு ரோடு போட 24 மணி நேரம் வேணுமா, அரசாங்க திட்டமெல்லாம் அப்டேட் ஆனபின்னுமா இப்படி இருக்கீங்கன்னு திட்டறார், சீஃப் செக்ரெட்டரி போன வாரம் ஒன் வீக் பேமெண்ட் சிஸ்டம் கொண்டுவர வழி இருக்கான்னு மீட்டிங்க்ல கேட்கறார்………..டெண்டர் சிஸ்டமே இப்ப 50% கீழேதான் தெரியுமில்ல?”
“ கரெக்ட் தான் ஸார், அந்த அப்டேட் ஜி.ஓ. நமக்கு இன்னும் வரல்லை ஸார், கலெக்டர் டேபிளோட நிக்குது…………..இன்னும் இந்த டெண்டர் குரூப்போடதானே ஸார் நாம மாரடிக்கிறோம் ? ” என்றான் சுகேஷ்.
தலைவலி மண்டையை பிளக்க, காபி சாப்பிடனும் போல இருந்தது சுகேசுக்கு. உமையாள் டேபிள் மீது வைத்துவிட்டுப் போன சிவப்புகாபி ஆறிப்போய் திரும்பவும் காப்ஸ்யூல் ஆக மாறியிருந்தது. பசி வேறு வயிற்றில் உருட்ட ஆரம்பித்தது………..’ எங்கே அந்த Lomoto delivery காரன்…?’
ஃபைனான்ஸ் ஹெட் அழகிரி காற்றில் வந்தார். “ என்ன, சொல்லுங்க….” என்றார், குரலிலேயே கறார்.
“பேசுங்க சுகேஷ்,” என்றார் அவனின் அதிகாரி கனெக்டில் !
“தெரியும் சுகேஷ், பேமண்ட் தானே, பில்லு இன்னும் நட்டுகிட்டு நிக்குது…….” என்றார் நக்கலாக.
“ஏன் ? “
“நீங்கதானே, பில்லை செக் பண்ணி அனுப்பினீங்க….? அதில் தேதி தப்பு, 2099 பதிலா, 2089 ன்னு பிரிண்ட் ஆயிருக்கு……………அதான் நிக்குதுன்னேன்….”
“என்ன சுகேஷ், தப்பு உன்னுதுதான் , புரிஞ்சுதா ?” என்றார் மே.அ. “ எனக்கு பேமண்ட் பாஸ் ஆகனும், அவ்ளோதான் “
அப்டேட் ஆகும் மொபைல் , ஆஃப் ஆகி நிற்பதை போல், தான் இருப்பதை உணர்ந்த சுகேஷ், “ இப்ப என்ன ஸார் பண்ண ?” என்றான் பரிதாபமாய்.
“ம்ம்ம்ம்ம், இப்ப கேளு……………….சரி, சரி, நம்ம ஐ.டி. கண்ணனை டச் பண்ணு “ என்றார் மே.அ.
தன் வாட்ச்சில் ஐ.டி.கண்ணனை டச் பண்ணி போனில் வரவழைத்தான் சுகேஷ். “ என்னாச்சு, பேமெண்ட் பிரச்சினையா?” என்றான் கண்ணன் அட்வான்சாய்.
“ எப்படி தெரியும் ?”
“ எனக்கு போன வாரமே தெரியும்………….”
“ என்ன பண்ண, இப்ப பேமண்ட் போடனுமாம்……..”
“ ஒண்ணும் பிரச்சினை இல்லை…………………உன் ஐடி, பாஸ்வேர்டு அனுப்பு, அதை ஆன் லைன் டிஃப்ட்டிலேயே 2089 ந்னு நீ எழுதுனதை ஏஐ வெச்சு கரெக்ட் பண்ணி, பேமேன்டும் போட்டிடறேன்”
“ ஒண்ணும் பிரச்சினை இல்லையே, எனக்கு பசிக்குதுடா”
“ Lomoto வுலதானே ஆர்டர் போட்டிருக்கே, உன் ஏரியாவுக்கு மெதுவாத்தான் வருவான்……பாஸ்வேர்டு அனுப்புடா”
அப்பாடா என்று அமர்ந்தவன் கவனித்தான் உமையாளை காணோமே. சுவரை பார்த்தான் ,
2099 – நவம்பர் 26, 13.46.05 என்றது சுவர்.
‘ஓ மை ஏஐ……கடந்த ரெண்டு மணி நேரமாக அவளை காணோமா ? எப்படி மறந்தேன் ?’
தனது அரசாங்க ஐடி பாஸ்வேர்டை , ஒன் டைம் பாஸ்வேர்டாக கண்ணனுக்கு அனுப்ப தனது தனிப்பட்ட ஏஐக்கு சொல்லிவிட்டு, உமையாளை தேடி உள் ரூமுக்குள் போனான், இல்லை ! அந்த வீட்டில் ஒரே ரூம் தான். அரசு வீடு.
அவர்களின் பொது பாத்ரூமுக்குள் பார்த்தான். இல்லை. அந்த டைப் வீடுகளில் ஒரே பாத் ரூம் தான்.
வெளியே ப்ளூடாக்சி நிறுத்தம் வரை தனது எண்பதாவது மாடியிலிருந்து மொபைல்கேமராவில் எட்டிப்பார்த்தான். இல்லை
தனது கணினியை உயிர்ப்பித்து ‘உமையாள் எங்கே’ என்றான் தனது தனிப்பட்ட ஏஐயிடம்.
ஒரே ஒரு செகண்ட்டுக்கு பிறகு, ‘உமையாள், எந்த உமையாள், உங்கள் 2093 கேர்ள் பிரண்டா , 2098இன் உடன்படிக்கையான மனைவியா’………..மீண்டும் ஒரு செகண்ட் நின்றுவிட்டு, ‘உங்கள் ஹார்ட்பீட் படி உங்கள் மனைவியை தேடுகிறீர்கள் என்று தெரிகிறது. அவள் பிரசவிக்க அவளுக்கு அமைக்கப்பட்ட தனி வார்டில் இருக்கிறாள். தாயும், வயிற்றில் உள்ள சேயும் நலம். டெலிவரி 2100 ஜனவரி ஒண்ணு காலை ஆறு’ என்றது.
‘சற்று முன் இங்கே இருந்தாளே?’ என்று டைப்பினான்.
உடன் பதில் வந்தது.’ அது நான் கிரியேட் செய்த Phantasm ‘
‘Phantasm ஆ…?’
‘ ஆம், Figment imagination. உன் தனிமையையும், சோர்வையும் போக்க உனக்காக உருவாக்கப்பட்டது’
‘ நான் ஆர்டர் போடவே இல்லையே……?’
‘இல்லை இது அரசு ஆணைப்படி உன் மனச்சோர்வை அரசு மருத்துவமனைக் குறிப்புக்கு, உன் வாட்ச் அனுப்பிய தகவலின் அடிப்படையில் எழுப்பப்பட்ட செல்ஃப் ஆர்டர்.’
‘…………………………….’ சுகேஷ்
‘ என்ன திகைப்பில் இருக்கிறாய்? நீ நேற்று எஸ்கலேட்டர் லிஃப்ட்டில் மயங்கியதன் அடிப்படையில் மருத்துவ கவனிப்பில் இருக்கிறாய்’
‘ வாட் ? இப்பத்தான் ஒரு பேமெண்ட் மேட்டர் முடித்தேன் ? அலுவலில் இருக்கிறேன் . ஆன் டூட்டி‘
‘ நல்லது. உன் போன்ற வொர்க்கஹாலிக் ஆட்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஆபிஸ் காட்சிதான் அதுவும். உன் ரத்த அழுத்தம் குறையும் போது, அதை அதிகப்படுத்த சில அலுவலக சிக்கல்களை பழைய உன் ஞாபக ஃபைல்களிலிருந்து எடுத்தோம். நீ மனைவியை தேடுவது அப்படியே. ‘
‘ நான் காபி சாப்பிட்டேனே…………..’
‘ அது அப்படியே ஸ்கிரீன் ஷாட்டாக உனக்கு வந்துள்ளது பார்’
‘ நான் என்னதான் செய்ய ?’
‘ இதே கேள்வியை நாற்பது வரிகளுக்கு முன் கேட்டுள்ளாய். உனக்கு செடக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது, உறங்கு……………….’
ஏஐ ஆட்டோ ஆஃப்







