வாசிப்பு என் வாழ்க்கையில் ஒரு பழக்கம் மட்டுமல்ல; அது ஒரு காலகட்டத்தில் எனக்குத் துணையாக இருந்த அமைதி. என் சிறுவயதில் வீட்டில் நிறைந்திருந்த பழைய புத்தகங்களில் தொடங்கி, கல்லூரி காலத்து ஆங்கில நாவல்கள், இந்திய எழுத்தாளர்களின் புனைவுகள் என என் தேடல் நீண்டது.
வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட தனிமையில்தான், வாசிப்பு மீண்டும் ஒரு ஆத்மார்த்தத் தோழனாக என்னைத் தேடி வந்தது. குறிப்பாக ரயில் பயணங்களில் ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் நாவல்கள் என் பயணத்துணையாக இருந்தன. அப்போது பல புத்தகங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்து வாசிப்பேன். அந்த நேரத்தில் அது தவறு என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
பிறகு 'Kindle' வழியாக நிதனி பிரபு அவர்கள், மல்லிகா மணிவண்ணன் அவர்கள், உஷாந்தி கவுதமன் அவர்கள் எனப் பலரின் படைப்புகளைத் தேடித் தேடி வாசித்தேன். ஆனால், ஒரு வாசகராக நான் சந்தித்த மிகப்பெரிய சவால்—அடுத்தது எதை வாசிப்பது? பல நேரங்களில், ஒரு நல்ல நாவலைத் தேடிக்கொண்டே என் வாசிப்பு நேரம் முடிந்துவிடும். பல இரவுகளில் ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்ய முடியாமல், வாசிக்காமலேயே உறங்கிப்போயிருக்கிறேன்.
இந்தத் தேடலில் இறங்கியபோதுதான் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும், இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கம் மெல்ல மங்கிக் கொண்டிருப்பதும் எனக்குப் புரிந்தது. என்னால் கதைகள் எழுத முடியாது; அதற்கான படைப்பாற்றல் என்னிடம் இல்லை. ஆனால், என் தனிமையான நேரங்களில் எனக்குத் துணையாக இருந்த இந்த வாசிப்பு உலகிற்கு, நான் எதையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று என் மனம் விரும்பியது.
அந்த எண்ணத்தின் விளைவுதான் – "IyalHub" (இயல் ஹப்).
IyalHub என்பது:
எழுத்தாளர்களுக்கான ஒரு திறந்த வெளி.
வாசகர்களுக்கான அமைதியான வாசிப்புச் சூழல்.
எழுத்தாளர் - வாசகர் இருவருக்கும் பயனளிக்கும் ஒரு தளம்.
முன்பு நான் தெரியாமல் செய்த தவறுகளைச் சரிசெய்யவும், படைப்பாளிகளின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் ஒரு பாதுகாப்பான, முறையான தளத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இந்தத் தளத்தின் இயக்கத்திற்குத் தேவையான நிதி ஒரு அங்கமாக இருந்தாலும், அதுவே இதன் முதன்மை நோக்கமல்ல. என்னைத் தனிமையில் அரவணைத்த வாசிப்பு உலகிற்கு, நான் செய்யும் ஒரு நன்றிக்கடனாகவும், சிறு திருப்பிக் கொடுப்பாகவுமே 'IyalHub'-ஐப் பார்க்கிறேன்.
குறிப்பு (A Note on the Authors Mentioned):
இந்தத் தொகுப்பில் நான் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களின் பெயர்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தவை மட்டுமே.
இது எந்த விதமான ஒப்பீட்டிற்காகவும் அல்ல.
யாரையும் உயர்த்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ அல்ல.
மற்ற எழுத்தாளர்களைத் தவிர்க்கும் நோக்கமும் எனக்கு இல்லை.
வாசிப்பு என்பது காலத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் ஒரு பயணம். இன்றைய விருப்பம் நாளை மாறலாம். IyalHub தளம் அனைத்து எழுத்தாளர்களையும் ஒரே மதிப்பில் இணைக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்பதே என் அடிப்படை நோக்கம்.